இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "திராவிட இனத்தைச் சுயமரியாதை மிக்க அறிவுச் சமுதாயமாக மாற்றியமைத்த பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17, தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாக விளங்கிய அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை அண்ணா தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
கொள்கைகளையும் லட்சியங்களையும் இதயத்தில் என்றும் ஏந்தி, நம் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட இந்த மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழாவாக்கியவர் கருணாநிதி. இந்த ஆண்டும் முப்பெரும் விழாவினை, சிறப்பாக நடத்தித் தர உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கமாக, முப்பெரும் விழா தொண்டர்களின் பெருந்திரளான கூட்டத்துடன் நடைபெறும். கரோனா கால ஊரடங்கின் காரணமாக இம்முறை அந்த வாய்ப்பு அமையவில்லை என்றாலும், கொள்கைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பினை நாம் ஒருபோதும் தவற விடுவதில்லை.
ஊரடங்குக் கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பும் தகுந்த இடைவெளியும் கொண்டுசெப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.