தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் 'சுய பாதுகாப்பு' நடவடிக்கைகளில் கவனமாக இருக்கவும் - ஸ்டாலின் - ஸ்டாலின் செய்தியறிக்கை

சென்னை: கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் தாங்களே 'சுய பாதுகாப்பு' நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Aug 12, 2020, 2:35 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தை தாண்டியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. 3 நாளில் போய் விடும், 10 நாளில் குறைந்து விடும், இது பணக்காரர்கள் வியாதி என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.

திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வி இன்றைக்கு இந்திய அளவில் கரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழ்நாட்டிற்கு அவப்பெயரையும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடித் தந்து விட்டது.

கடந்த ஒரு மாதத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 163 சதவீதம் அதிகரித்து விட்டது. இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டது.

கடந்த பத்து நாட்களில் மட்டும் 1, 224 பேர் இந்த நோயால் மரணமடைந்து - தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இறப்பு என்ற அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது தமிழ்நாடு.

இதுபோன்ற சூழலில் தனக்குத் தெரிந்த நிர்வாகம் - மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, “ஊரடங்குகளைப் பிறப்பிப்பது மட்டுமே” என்று ஒவ்வொரு ஊரடங்காக அறிவித்து பிறகு பெயரளவிற்குத் தளர்வுகளைச் சொல்லி விட்டு மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாமல் “இ-பாஸ்” முறையில் தடுத்து வருகிறது அதிமுக அரசு.

ஊழல் தலைவிரித்தாடும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வீட்டிற்குள்ளேயே மக்கள் - குறிப்பாக வாழ்வாதாரத்தைத் தேடும் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், கட்டிப் போட்டிருப்பதைப் போல, முடக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் கரோனாவால் மோசமாகி விட்ட இயல்பு நிலையை மாற்ற ஆலோசனை நடத்துங்கள். குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கி - 3 லட்சத்தைத் தாண்டியுள்ள கரோனா பாதிப்பு மேலும் சில லட்சங்களைத் தொட்டுவிடாமல் இருக்க அனைத்து மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அதிமுக அரசு சொன்னது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கிய பிறகும் கரோனா பாதிப்பு குறையவில்லை; கூடிக்கொண்டு தான் போகிறது. அப்படியானால் இவர்களுக்கு ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

தமிழ்நாட்டு மக்களே, அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அதிமுக அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் கரோனாவிலுருந்து பாதுகாத்துக் கொள்ள 'சுய பாதுகாப்பு' நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details