சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன.
இறுதிநாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மூன்றாவது முறையாக விருப்ப மனு தாக்கல்செய்துள்ளார்.
திமுக சார்பாக இன்றுவரை ஏழாயிரத்து 500-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடவும், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி லால்குடி தொகுதியிலும் மற்றும் பல்வேறு திமுக முக்கிய நிர்வாகிகள் அவர்களுக்கு விருப்பமான தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் வருகின்ற தேர்தலிலும் போட்டியிட இன்று விருப்ப மனு தாக்கல்செய்துள்ளார்.
அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபனிடம் தனது விருப்ப மனுவை அளித்தார். விருப்ப மனுக்கள் தாக்கல்செய்துள்ளவர்களுக்கு வருகின்ற மார்ச் 2 முதல் 6ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.