தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சட்டமன்றத்திற்குள் குட்கா

சென்னை: தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

By

Published : Aug 14, 2020, 5:38 PM IST

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்து அரசுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேர் மீது உரிமை மீறல் கொண்டுவரப்பட்டது. மேலும், 21 பேரிடமும் விளக்கம் கேட்டு உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள், காவல்துறை உதவியோடு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு முதலமைச்சர் பழனிசாமி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில், ஓபிஎஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேருக்கு எதிரான புகார் மீது உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்காத நிலையில் திமுக மீது மட்டும் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2017 மார்ச் முதல் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், 2017 பிப்ரவரி 18ஆம் தேதியே சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் தற்போதும் பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். மேலும், சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய திமுக வழக்குகள் மீதான விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details