தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் - ஸ்டாலின் - bjb

சென்னை: "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Jun 30, 2019, 4:04 PM IST

மத்திய அரசு இருதினங்களுக்கு முன்பு 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை கொண்டு வர இருப்பதாக அறிவித்தது. இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், 'மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க முயலும் ஆதிக்க மேலாண்மை கொண்ட மத்திய பாஜக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உள்ள மத்திய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இது போன்று மாநில உரிமைகளை மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் நடவடிக்கைக்கு துணை போவது மிகுந்த வருத்தத்திற்குரியது. பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை. அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம். ' மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரையும் நாங்களே தேர்வு செய்வோம்” என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது, பிரதமர் நரேந்திரமோடி கூறி வரும் “கூட்டுறவுக் கூட்டாட்சி” முழக்கத்தை கேலிக்குரியதாக்கும் செயல்.

மத்தியில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்ற சர்வ அதிகார உள்நோக்கம் நிறைந்தது. இதை திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் ஏற்காது. 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை', 'அகில இந்திய நீதித்துறைத் தேர்வு' போன்ற அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து- மத்திய அரசை எஜமானராகவும், மாநில அரசுகளை எடுபிடிகளாகவும், தலை ஆட்டும் பொம்மைகளாகவும் நடத்த முயற்சி செய்வது, அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை தகர்த்தெறியும் அராஜக மனப்பான்மை கொண்ட போக்கு என்றே எண்ணிட வேண்டியிருக்கிறது.

அதிமுக அரசு இந்தத் திட்டங்களை ஆரம்ப நிலையிலேயே கடுமையாக எதிர்த்து - ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்றவற்றை அடியோடு கைவிட வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அசைந்து கொடுக்குமா அதிமுக அரசு? மாநில சுயாட்சி கொள்கைக்காவது தன் குரலில் மத்திய பாஜக அரசை எதிர்க்கத் துணியுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details