மாநில உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராடும் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களைப் பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததற்கு, தமிழ்நாடு மக்கள் சார்பில் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த ஒருங்கிணைந்து செயல்படும் உங்களது முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை.
மாநிலங்களுக்கு நிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும் போது, அவர்களால் வழங்கப்படாத நிதிக்குப் பதிலாக நம்மைக் கடன் வாங்கிக் கொள்ளுமாறு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமை மற்றும் நீதியைப் பரிதாபத்திற்கு உள்ளாக்குவதாகும்.
தங்களுடைய இதுவரையிலான முயற்சிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் கல்வி அளிப்பது தமிழ்நாடுதான்'