தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் மோசமான விளைவுகளை உண்டாக்கி வருகிறது.
சென்னையில், புதிதாக தொற்று ஏற்படும் நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், அண்மையில் பிரபல செய்தி வாசிப்பாளர் வரதராஜன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொய்யான குற்றச்சாட்டை பரப்பியதாக் கூறி வரதராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஐந்து தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அலைகழிக்கப்பட்டதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்று சொல்லி வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் முகத்திரையை இந்த செய்தி கிழிக்கிறது.
ஐந்து தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என அலைகழிக்கப்பட்டதைக் காட்டும் இச்செய்திக்கு அமைச்சரின் பதில் என்ன? வழக்குதானா? பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்! ” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.