இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் எதைக் கடுமையாக எதிர்த்து, மத்திய அமைச்சராக இருந்த ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா வரை சென்றுள்ளாரோ, அதற்குக் காரணமான, மத்திய பாஜக அரசின் சட்டங்களுக்கு விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு, மக்களவையில், அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே, அதிமுக மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுக்கும், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டமும், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டமும் - தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்தச் சட்டங்களை, “விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள்” என்றும், “தமிழ்நாடு பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள்” என்றும் கூறி அதிமுக ஆதரித்திருப்பது, விவசாயிகளுக்கு இதுவரை செய்த பாதகமெல்லாம் போதாது என்று மன்னிக்க முடியாத துரோகத்தையும் தற்போது செய்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.