இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுகளை, ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ரத்து செய்த அதிமுக அரசு இந்தக் காலகட்டத்தையும் மருத்துவக் கட்டமைப்பு ரீதியாக, உருப்படியாக, பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை மருத்துவ உலகின் நிபுணர்கள் அறிவார்கள்.
கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பறிகொடுத்துவிட்டு, இன்றைக்கு மீண்டும் ஊரடங்கு குறித்துப் பரிசீலனை செய்ய முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய வல்லுநர் குழுவைச் சந்தித்துள்ளார். அந்தக் குழு ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை என்றாலும், பரிசோதனை மிக முக்கியம் அதை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்கும் என்று மீண்டும் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது. ஜூன் 19ஆம் தேதிக்குப் பிறகான ஊரடங்குக் காலகட்டத்தில் சென்னையில் தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 2.55 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்திருப்பதாக அரசு அறிவித்தாலும், மாவட்ட வாரியாகவோ, மருத்துவமனை வாரியாகவோ, பரிசோதனை செய்த எண்ணிக்கைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. அதனால் இந்த பரிசோதனை என்று அமைச்சர்களும், முதலமைச்சரும் கூறுவதே ஒரு 'பகட்டு' அறிவிப்பு என்ற நிலை நீடிக்கிறது. மின் கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் மின்னல் போல் தாக்குகிறது. அதைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
கேரள மாநிலம் போல் 70 விழுக்காடு மின்கட்டணத்தை செலுத்தினால் போதும், தவணை முறையில் கூட செலுத்திக் கொள்ளலாம் என்று, நெருக்கடியான இந்த நேரத்தில், ஒரு மனித நேய உத்தரவினைக் கூடப் பிறப்பிக்க இந்த அரசுக்கு மனமில்லை.
கரோனா சோகம், வாழ்வாதாரம் பாதிப்பு, வருவாய் தேடும் குடும்பத் தலைவனை கரோனாவிற்கு பறிகொடுத்த கொடுமை போன்றவற்றால் மாநிலம் முழுவதும் தற்கொலைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை நடத்தும் முதலமைச்சருக்கு மீண்டும் பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.
1 .வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.
2. ஊரடங்கு கால மின்கட்டணத்தினை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.
3நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.