தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் அமைதிக்கான வழி - முதலமைச்சர்

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு உணர வேண்டும்
ஒன்றிய அரசு உணர வேண்டும்

By

Published : Oct 5, 2021, 2:50 PM IST

சென்னை:ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.3) உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றினார்.

இதனால் கோபமடைந்த விவசாயிகள் இரண்டு சொகுசு கார்களை தீயிட்டு கொளுத்தினர். அதன் பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இன்று (அக்.5) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

300 நாட்களாக போராட்டம்

அதில், " உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாள்களாக உழவர்கள் போராடுகிறார்கள். அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

நீதி விசாரணை தேவை

இத்தகைய கொந்தளிப்பு சூழ்நிலையை அறிய சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்ட விரோத காவலில் பிரியங்கா காந்தி- மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details