சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த பட்ஜெட் தொடரில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தைச் செயல்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று (செப் 15) காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்குத் திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "பெண்கள் வீட்டில் உழைக்கும் உழைப்பை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதனை அங்கீகரிக்கும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது தான் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணை வடிவாய் இருப்பவர். என் மனைவி துர்கா என்னில் பாதி, எனக்கு உறுதுணையாக இருந்து எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பது என் மனைவி துர்காதான்.