சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள திரு.வி.க நகர்ப் பகுதியில் 88 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "மது சமூக பிரச்னையாக உள்ளது. மதுவை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது. மதுவை படிப்படியாக விலக்களிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். தமிழ்நாட்டில் மது அருந்துபவர்கள் அதிகரிக்க திமுக தான் காரணம். திமுக தான் மது விற்பனைக்கு மூலக் காரணம். திமுக தலைவராக இருந்த கலைஞர் தான் மதுக்கடைகளைத் தொடங்கினார்.
எம்ஜிஆர் மதுவிலக்கை கடுமையாகக் கொண்டுவந்து ஆட்சியை நடத்தினார். ஆனால், கள்ளச்சாராயம் பெருகியதால் மெத்தனால், எத்தனாலை குடித்து மக்கள் உயிரிழந்தார்கள். இதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. படிப்படியாக கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது. டாஸ்மாக் மது விற்பனையைப் பொறுத்தவரை எங்கள் கொள்கை, மது தேவை இல்லை என்பதுதான்.
2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். பின்பு மது விற்பனைக்கான நேரத்தை குறைத்தார். மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஆயிரத்து 600 கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளது. மீதியுள்ள 4 ஆயிரத்து 400 மதுக்கடைகளை படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். மத்திய அரசின் வழிமுறையைப் பின்பற்றி பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க:என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்