சென்னை:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் நேற்று (நவ.21) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போரட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், “விவசாயிகளின் நலனின் தொடர்ந்து அக்கறையின்றி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், விவாசாயிகளைத் தொடர்ந்து இந்த அரசு வஞ்சித்து வருகிறது.
விவசாயிகள் என்ன குண்டர்களா? எதற்கு விவசாயிகள் மீது இந்த சட்டமானது பாய வேண்டும். மேல்மா சிப்காட் விவகாரத்தில் போராடிய அனைவர் மீதும் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, நிபந்தனையின்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். நியாயம் கேட்டு போராடும் விவசாயிகளை காவல்துறை மூலம் கைது செய்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் வரை விவசாயிகள் ஓயமாட்டோம்” என்று தெரிவித்தார்.
சிப்காட் விவகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 100 நாட்களுக்கு மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.