சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை கண்டித்தும் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நீட் மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து, மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார். இதனையடுத்து, இரண்டாவது முறையாக சட்டமன்றத்தை கூட்டி நீட் மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னரும் நீட் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதப்படுத்தி வந்தார்.
இதனால், ஆளுநர் மீது நம்பிக்கை இழந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அதற்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அதில், நீட் தேர்வு பயிற்சிக்கு அதிக பணம் செலவழிவதாக பெற்றோர்கள் கூறியதற்கு ஆளுநர் ஆவேசம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசியிருந்த ஆளுநர், “நீட் தேர்வு ரத்து மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. இருந்தாலும் நீட் தேர்வு ரத்து மசோதவிற்கு கையெழுத்து போட மாட்டேன்” என கூறியிருந்தார். இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களில் சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் உயிரிழந்தனர். இதனால், நீட் தேர்வு மசோதாவிற்கான எதிர்ப்பு தமிழகத்தில் அதிகரித்தது. இதற்கு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தான் இன்று (ஆகஸ்ட் 20) திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்ற திட்டமா? வியாபாரிகள் கூறும் விருப்பும்.. வெறுப்பும்..!