சென்னை:திமுக மற்றும் கட்சிக்காரர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி சமூக வலைத்தளத்தில் போடப்பட்டுள்ள வீடியோவை உடனடியாக நீக்க வேண்டு எனவும் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறியதற்காக இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்.
இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், "மு.க. ஸ்டாலின் தலைமையில் 2021-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் அயராது உழைத்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும் உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். 'DMK Files' என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள்.
திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ.1408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3474.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்பது பொய்யானது.
ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது.
ஆடுகள் பாஜகாவின் சொத்தா?
ஒரு தனிநபரின் சொத்துகளுக்கும் அரசியல் கட்சியின் சொத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் கட்சிக்காரர் கூறுகிறார். இந்தக் கொள்கையை விளக்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறார். உங்களிடம் 3-4 ஆடுகள் இருப்பதாக அடிக்கடி கூறுவதால், இந்த ஆடுகள் பாஜகவின் சொத்தாக மாறுமா? அல்லது உங்கள் ரஃபேல் கைக்கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா?
பாஜவுக்கு நிதி வந்தது எப்படி?
2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு 9,208 கோடி ரூபாய் என ஊடகங்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 5 ஆயிரத்து 270 கோடி ரூபாய் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே சென்றுள்ளது. இவையும் முறைகேடான வழியில் பெறப்பட்டவை என்று கூற முடியுமா?
நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை
தமிழ்நாடு முதலமைச்சர் பணமோசடியில் ஈடுபடவே துபாய்க்குச் சென்றார் எனவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீங்கள் அதில் கூறியது போல நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை.