சென்னை:இன்று நடந்த சட்டப்பேரவையில் இருந்து திமுக அரசைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,
அதில், ”கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இந்த எட்டு மாத காலத்தில் கொலை,கொள்ளை,திருட்டு, பலாத்காரசம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை:
திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதை விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம், கட்டப்பஞ்சாயத்துக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உணவு கிடைக்காமல் மக்களும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளைத் திமுக அரசு செய்யவில்லை.
2015இல் பெரிதாகப் பாதிப்பு ஏற்பட்டபோது, அதிமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கியது. ஆனால், திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை.
மக்களை திமுக ஏமாற்றிவிட்டது:
தமிழ்நாடு மக்கள் தைப்பொங்கலைச் சிறப்பாக கொண்டாட ரூ.2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.