திருத்தப்பட்ட நிதி மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று (ஆகஸ்ட் 18) மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியதும் கொடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடுவதாக திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, திமுகவிற்கு எதிராகக் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து, பாஜக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வெளிநடப்புச் செய்தனர்.
ஜெ. மறைவும் கொடநாடு பங்களாவும்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "திமுக அரசு மக்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை தனது அதிகார பலத்தால் நசுக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் அதிமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர்.
அதிமுகவை நசுக்கும் தவறான கண்ணோட்டத்தோடு செயல்பட்டுவருகிறார்கள். அவர்கள் தொடுகின்ற அத்தனை வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இன்றும் நாளையும் நடைபெற உள்ள கூட்ட நிகழ்வுகளை புறக்கணிப்போம்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு வீட்டில் சயன், அவரது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அதனையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மறு விசாரணை கோராத சயன்
அந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் சயன் என்பவரை அழைத்து திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ரகசிய வாக்குமூலம் பெற்றதாகச் செய்தி செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளன.