சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் முன்னதாக கரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட நிலையிலும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், துரைமுருகனின் உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன.
தொடர்ந்து மருத்துவர்கள் அவரைக் கண்காணித்துவருகின்றனர். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது" எனக் கூறியுள்ளது.
இதற்கிடையில் துரைமுருகனின் மகனும், மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.