சென்னை:தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 30ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள 119 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி வெற்றி பெற்ற நிலையில், தெலங்கானாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது காங்கிரஸ். தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கு, காங்கிரஸ் தரப்பில் அதன் தேசியத் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்
மேலும், தெலங்கானா மாநில திமுக உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என ஆதரவு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:அனலாக் முறையில் கேபிள் டிவி சேவைக்கு அனுமதி மறுக்க கோரிய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!