தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் காவல் துறை உதவியோடு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் 2017ஆம் ஆண்டு குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டுசென்றனர்.
இது தொடர்பாக பேரவைத் தலைவர் அனுப்பிய பரிந்துரையின்படி, சட்டப்பேரவை உரிமைக்குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். ஜெ. அன்பழகன், கே.பி.பி. சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், கு.க. செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அமர்வு விசாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், 2017ஆம் ஆண்டு அனுப்பப்பட்டநோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால், அதை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும், பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம். திமுக எம்எல்ஏக்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.