தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக ஃபைல்ஸ் பார்ட்-2 ஜூலை முதல் வாரம் வெளியாகும்' - அண்ணாமலை - திமுக ஃபைல்ஸ் 2 ஜூலையில் வெளியீடு

திமுக ஃபைல்ஸ் பார்ட்-2 ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai
அண்ணாமலை

By

Published : May 12, 2023, 5:15 PM IST

சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் சிலரின் சொத்துப் பட்டியலை 'DMK Files' என்ற பெயரில், கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்நிலையில் சென்னையில் இன்று (மே 12) பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாசர் நீக்கத்துக்கு வரவேற்பு:அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின், துறை குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறினோம். ஆவின் பால் விலை ஒரே ஆண்டில் மூன்று முறை உயர்த்தப்பட்டது. ஜனவரி மாதம் தொண்டர் மீது நாசர் கல் வீசினார். அவரை அமைச்சரவையிலிருந்து விடுவித்ததற்கு எங்களது பாராட்டைத் தெரிவித்து, வரவேற்கிறோம்.

அதிக தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பத்துக்கு தொழில் துறையை ஒதுக்கீடு செய்வது பொருந்துமென்றால், அது டிஆர்பி ராஜாவுக்கு பொருந்தும். 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை டி.ஆர்.பி.ராஜா குடும்பத்தினர் வைத்துள்ளனர். மேலும் அவர்கள் சாராய ஆலைகளை நடத்துகின்றனர். டி.ஆர்.பி ராஜாவால் தொழில்துறையில் திறம்படப் பணியாற்ற முடியுமா?

'பல ஊழல்களை செய்தவர் டி.ஆர்.பாலு': சாராய உற்பத்தி, சாராய விற்பனை அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டுமென திமுகவினர் நினைக்கின்றனர். டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது நகைப்பிற்குரியது. அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியவர் அவர். பல ஊழல்களை செய்தவர். மேலும், அதிகமாக அவர் மீதான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பேன். வடசேரி பகுதியில் புதிதாக சாராய ஆலையைத் திறக்க முயற்சித்தவர் டி.ஆர்.பாலு. 2008ஆம் ஆண்டு டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இந்த போது அவரது சொந்த ஆயில் நிறுவனத்திற்கு குறைந்த விலையில், ஆயில் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

'2வது வழக்கை தொடருங்கள்': பழனிவேல் தியாகராஜன் குறித்து ஜனவரியில் பேசிய முதலமைச்சர், 3 தலைமுறையாக தமிழக வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்த குடும்பம். தனது மொத்த திறமையையும் நிதித்துறைக்கு பயன்படுத்தி வருகிறார் எனப் பாராட்டினார். பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நிலையில் அவரை மாற்றக் காரணம் என்ன? முதலமைச்சர் குடும்பம் குறித்த ஆடியோ பிரச்னைக்காக அவரை மாற்றியதை ஏற்க முடியாது. முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும். அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும், 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

பிடிஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்தக் கூடாது. பிடிஆர் குறித்து பாராட்டி பேசிய முதலமைச்சருக்கு 2 மாதத்தில் ஏன் மனமாற்றம் ஏற்பட்டது? சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? பிடிஆர் ஆடியோ பதிவை வெளியிட்டதும் முதலமைச்சர் பார்வையில் குற்றம்தான். எனவே, இரண்டாவது வழக்கை என் மீது முதலமைச்சர் தொடர வேண்டும்.

திமுக ஃபைல்ஸ் பார்ட்-2: என் மீது மொத்தமாக ரூ.1,461 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்தியாவில் யார் மீதும் இந்த அளவு இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது இல்லை. 'பார்ட்-2 திமுக பைல்ஸ்' ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். திமுக நிர்வாகிகள் 21 பேர் அதில் இடம் பெறுவர். சேகர்பாபு மகள் தனது குடும்ப பிரச்னைக்காக என்னிடம்தான் முதலில் வந்தார். ஆனால், குடும்பப் பிரச்னை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன். தமிழக காவல்துறையை அணுக முடியாவிட்டால், கர்நாடக காவல்துறையை அணுகச் சொன்னேன். குடும்பப் பிரச்னையில் பாஜக தலையிட விரும்புவதில்லை. ஆனால், அரசு இயந்திரம் தமிழக காவல்துறையைப் பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளனர். அவரது கணவர் ஒரு சாமானிய மனிதர். அவர் மீது தொடர்ந்து வழக்கு போடுவது தவறு. முதலமைச்சர் டிஜிபிக்கு இது குறித்து உத்தரவிட வேண்டும். அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

ஆர்.எஸ்.பாரதி என்னை கைது செய்ய காவல்துறை வரவுள்ளதாக 6 மாதங்களாக சொல்லி வருகிறார். என்னை கைது செய்யுமாறு மீண்டும் ஒருமுறை ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுகிறேன். ஆருத்ரா மோசடி பணம் திமுகவில் உள்ள எந்த அமைச்சருக்கு சென்றது என திமுக பைல்ஸ் -2ஆவது பாகத்தில் உண்மை வெளியாகும். ஆருத்ரா மோசடி குறித்த தரவுகள் என்னிடம் வந்த பிறகு, அது குறித்து பேசுவதை திமுகவினர் கைவிட்டுவிட்டனர்.

'கூட்டணியில் குழப்பம் இல்லை':தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவை ஒரு கூட்டணியாக இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் எனக் கேட்பதற்கு உரிமை உண்டு. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக் கொள்வது குறித்து பிரதமரும், அமித் ஷாவும் தான் முடிவு எடுப்பார்கள்.

கர்நாடகத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 113-ஐ தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னையில் தலையிடுவது எங்கள் வேலை இல்லை. அதிமுக பொதுக்குழுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட பிறகுதான் பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிசாமியை அழைத்துப் பேசினர். அதுவரை நாங்கள் நடுவுநிலையுடன் அமைதி காத்தோம். ஓபிஎஸ் - டிடிவி ஏன் சத்தித்தனர் என நான் கூறுவது சரியாக இருக்காது. ஓ.பன்னீர் செல்வம் மீது தனிப்பட்ட முறையில் மோடி, அமித்ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை உள்ளது.

திமுகவினரின் வேட்பு மனுவில் நாங்கள் வெளியிட்ட சொத்துப் பட்டியலில் உள்ள 80 சதவீத தகவல்கள் இல்லை. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்வது அவசியம். முதலமைச்சர் துபாய் சென்றதை குறை கூறவில்லை. அங்கு நடந்த சந்திப்புகளைத்தான் குறை கூறினோம். எனது நடைபயணத்தை ஜூலை மாதத்தில் தொடங்குவேன்.

ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவின் பூத் கமிட்டியை தேர்தல் அல்லாத காலத்தில் பார்க்க முடியுமா? ஒவ்வொரு செல்போனும் பூத் கமிட்டிதான். பாஜக மக்கள் விரும்பும் கட்சியாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாஜக அவ்வாறு கூறவில்லை.

காரணம் நீதிமன்ற வழக்கு காரணமாக நாங்கள் அவ்வாறு கூற முடியாது. திமுக இதுகுறித்து ஏன் கண்டன அறிக்கை கொடுக்கவில்லை? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பாஜக பேசாது. அது குறித்து தமிழக காங்கிரஸ் வாய் திறக்காதது அபத்தமானது.

'கமலாலயம் திறந்தே இருக்கும்': உதயசந்திரன் பலருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். மாநில கல்விக் கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசனை அவர் அச்சுறுத்தியிருந்தால் அது தவறு. மாநில கல்விக் கொள்கையை தனியாக உருவாக்கினாலும், அது 99 சதவீதம் தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துத்தான் போகும். விதண்டாவாதமாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முயல்கின்றனர்.

காமராசர் காலத்திலேயே தமிழகத்தில் பல கல்லூரிகள் இருந்தன. திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 எடுத்து பெருமைப்படுத்தியுள்ளார். ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆளுநர் உண்மையைத்தான் பேசி வருகிறார். இந்தியாவின் பழைமையான கட்சியான திமுக ஆளுநர் குறித்து குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.

ஆளுநர் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறலாம். ஆனால், அதற்காக ஆளுநரை தவறு என கூறுவதை ஏற்க முடியாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சினிமா சூட்டிங், ரசிகர் மன்ற வேலையை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் போராட்டங்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம். கேரளா ஸ்டோரி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படத்தின் மையக்கதை சரியானதுதான். அதில் சொல்லப்படும் எண்ணிக்கை 32 ஆயிரம் என்பது சரியா என எனக்குத் தெரியாது. கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் அதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஏன் வாங்கியது? அமைச்சர் பிடிஆர், முன்னாள் அமைச்சர் நாசர் மட்டும் அல்ல, பாஜகவை பொறுத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கமாட்டோம். அவர்களாக வந்தால் ஏற்றுக்கொள்வோம். கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குறைந்து வருகிறது: ஆளுநர் ரவி

ABOUT THE AUTHOR

...view details