சாலை விரிவாக்கம் முறைகேடு:
தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆண்டுதோறும் டெண்டர் கோரும் போது ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதால் தற்போது 800 ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பைபர் ஆப்டிக் கேபிள் முறைகேடு:
மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.
குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையில் டெண்டர் யாருக்கும் ஒதுக்கப்படாததால் முறைகேடு நடைபெற முகாந்திரம் இல்லை என்பதால் வழக்குகளை முடித்து வைத்துவிட்டது. எனவே, அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ் பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.