சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜக நிர்வாகி மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரை அருண், காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன்.11) புகாரளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு பிரதமர் மோடி படம் பொருந்திய சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மோடி புகைப்படத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் பொருந்திய சான்றிதழ் வழங்கி வருவதாக பாஜக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் அவதூறு பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழை மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால் மார்பிங் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயரை களங்கபடுத்தும் நோக்கில் நிர்மல் குமார் பதிவிட்டு வருவது கண்டிக்கத்தக்கது.