தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளைப் பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வழக்கு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் எத்தனை கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன, எத்தனை பகுதிகளில் மறுவாக்குப்பதிவு செய்யப்படவுள்ளது என தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ELECTION
ELECTION

By

Published : Jan 3, 2020, 8:40 AM IST

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களில் முடிவுகளை உடனே வெளியிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதில், சில வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. பல இடங்களில் மூன்றடுக்கு காவலர் பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

திமுக பல இடங்களில் இதுவரை முன்னணி வகித்த முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது குறித்த பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் தீர்வுகாணாமல் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என ஊடகங்களில் கூறிவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், "91 ஆயிரத்து 975 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அதில் கிராம பஞ்சாயத்து தலைவருக்கான ஒன்பதாயிரத்து 624 பதவிகளுக்கு இரண்டாயிரத்து 660 முடிவுகளும் ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஐந்தாயிரத்து 90 பதவிகளுக்கு 909 முடிவுகளும் மாவட்ட பஞ்சாயத்துக்கான 515 பதவிகளில் 3 முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சேலத்தில் இதுவரை 30 விழுக்காடு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் நடைமுறைகள் அனைத்தும் காணொலி பதிவுசெய்து கண்காணிக்கப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கை விதிகளைப் பின்பற்றியே நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் மையங்களில் எத்தனை கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன, எத்தனை பகுதிகளில் மறுவாக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனத் தேர்தல் ஆணையம் ஜனவரி 3ஆம் தேதிஅறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்த பா. ரஞ்சித் அண்ணன்!

ABOUT THE AUTHOR

...view details