சென்னைமணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65). இவரை கடந்த 10 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் போலீசார் சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். இதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.
அதில், தகாத உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு என்பவரும், அவரது சகோதரர் வாஷிம்பாஷா என்பவரும் கூட்டாக சேர்ந்து திமுக பிரமுகரான சக்கரபாணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி, சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சக்கரபாணியை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து சாக்குமூட்டையில் வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்து, அந்த மூட்டையைக் கைப்பற்றினர்.
மேலும் இக்கொலைக்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு என்பவர் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தமீம் பானு, வாஷிம்பாஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு ஆகிய மூவரையும் ராயபுரம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதற்குப் பிறகான போலீசாரின் விசாரணையில், வெட்டப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.