சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் மிக முக்கிய தேர்தல் என்பதால், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வீரியத்துடன் பரப்புரை செய்து வருகின்றன. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த திமுக, இம்முறை எந்த விதத்திலும் வெற்றியை தவறவிடக் கூடாது என்ற முனைப்புடன் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக திமுக உடன் இணைந்து தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவான ஐபேக் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் திமுக மேற்கொள்ளும் பரப்புரைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை ஐபேக் கவனித்து வருகின்றது. கரோனா காலகட்டத்தில் திமுக முன்னெடுத்த 'ஒன்றிணைவோம் வா' தொடங்கி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' வரை அனைத்திலும் ஐபேக் குழுவின் பங்கு உள்ளது.