2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக உரிமைக்குழு, நோட்டீஸ் அனுப்பியது.
உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து, திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தடையை நீக்க கோரி தமிழ்நாடு அரசும் மனுத்தாக்கல் செய்தது.
இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்திற்காக தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர்.