சென்னை: தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.மாணிக்கம் திருமலைகிரி கிராமத்தைச் சார்ந்த பட்டியலின இளைஞர் பிரவீன் என்பவரையும், கிராமத்து மக்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுவதும், ஊரை விட்டே விரட்டி விடுவேன் என்று அச்சுறுத்துவதும், சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனையறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் சென்றால் கோயில் தீட்டாகிவிடும் என்றும் சாதி இந்துக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கூறி, ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சிமன்ற தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ஆம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்துப் பேசியதோடு, கிராமத்து மக்களைக் கிராமத்து விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டுகிறார்.