தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் எம்.பி. மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. திட்டம்தீட்டி கொலை செய்தது அம்பலம் - மருமகனே திட்டம் தீட்டி கொடூரமாக கொலை

முன்னாள் எம்பி மஸ்தானை, அவரது மருமகனே திட்டம் தீட்டி கொடூரமாக கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் எம்பி மரணத்தில் திடீர் திருப்பம்
முன்னாள் எம்பி மரணத்தில் திடீர் திருப்பம்

By

Published : Dec 30, 2022, 4:11 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளருமாக இருந்தவர், டாக்டர் மஸ்தான் (66). 1995ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இவர் ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசித்து வந்தார்.

கடந்த 22ஆம் தேதி இரவு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உயிர் இழந்த மஸ்தானின் முகத்திலும், கையிலும் ரத்தகாயங்கள் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. மேலும் மஸ்தானோடு காரில் பயணித்த அவரது உறவினரான இம்ரான் நெஞ்சு வலி ஏற்பட்டதாக மஸ்தானின் உறவினர்களிடம் கூறும்போது, முன்னுக்குப் பின் முரணான தகவலை முதலில் கூறியுள்ளார். உறவினர்களும் மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது உடன் இருந்த இம்ரானிடம் தொடர்ச்சியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடற்கூராய்வு அறிக்கையில் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. நெஞ்சு வலி என்று இம்ரான் கூறிய நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதையடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறைக்கு ஏற்பட்டது.

இம்ரானிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் மஸ்தானுக்கும், இம்ரானுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது உறவினர்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இம்ரான் செல்போனை ஆய்வு செய்தபோது கொலை செய்ய திட்டம் தீட்டிய அந்த நான்கு பேர் கொண்ட கும்பலிடம் பேசியது தெரியவந்துள்ளது.

அந்த கொலை செய்த கும்பலை சேர்ந்த நபர்களை காவல் துறை பிடித்து விசாரித்ததில், மஸ்தானை திட்டம் தீட்டி காரிலேயே வைத்து கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். கையை இரண்டு பேர் இருக்க பிடித்துக் கொண்டும், முகத்தையும் வாயையும் பொத்தி, மூச்சுத்திணற திணற கொலை செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது போல் நாடகமாடி மஸ்தான் உறவினர்களையும் காவல் துறையினையும் இம்ரான் திசை திருப்பி நாடகம் ஆடியதும் கொலை செய்த கும்பலிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணையில் சித்த மருத்துவரான இம்ரான், மஸ்தானின் தம்பியின் மருமகன் என்பதும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அடிக்கடி மஸ்தானை சந்தித்தும், கடனாக 8 லட்சத்து 25 ஆயிரம் பணமாக வங்கியிலும், மேலும் சில லட்ச ரூபாய் பணத்தை மஸ்தானிடமும் இம்ரான் பெற்றுள்ளார்.

மஸ்தான் உயிர் இழப்பதற்கு முதல்நாள், அவரது மகனுடைய நிச்சயதார்த்தம் இருந்ததால் கொடுத்த பணத்தை, இம்ரானிடம் மஸ்தான் திருப்பிக் கேட்டுள்ளார். அவ்வாறு கேட்டு நெருக்கடி கொடுத்ததால், நண்பர்கள் உதவியோடு இம்ரான் கொலை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த கொலை செய்ய ரூ.15 லட்சம் பேரம் பேசியதும், அதில் முன்பணமாக 1 லட்சம் ரூபாய் மஸ்தான் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் மஸ்தானின் காரிலே சென்ற இம்ரான் நடுவழியிலேயே தனது நண்பர்களான, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தெளபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை ஏற்றிக்கொண்டு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி, மஸ்தானின் கைகளை பின்புறமாக இருவர் பிடித்துக்கொள்ள முகத்தை அமுக்கி கொலைசெய்ததும் தெரியவந்துள்ளது.

அதன்படி மஸ்தானின் உறவினர் இம்ரான், சுல்தான் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய கொடுக்கப்பட்ட பணத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மஸ்தானை கைது செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது

இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: திரும்பிப் பார்க்க வைத்த குற்ற நிகழ்வுகள்!

ABOUT THE AUTHOR

...view details