தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் ஸ்டன்ட்களில் திமுக ஈடுபடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாடு அமைச்சர்களின் இரண்டாவது ஊழல் பட்டியலை தயாரித்து அதனை ஆளுநரிடம் அளிப்பது வெறும் அரசியல் ஸ்டண்ட் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் .

DMK engages in political stunts said Minister Jayakumar
DMK engages in political stunts said Minister Jayakumar

By

Published : Feb 19, 2021, 2:53 PM IST

சென்னை: தமிழ்த் தாத்தா உ.வே சாமிநாத அய்யரின் 167ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "வறுமையில் இருந்தபோதும் தமிழுக்கு தொண்டாற்ற பாடுபட்டவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழக அமைச்சர்களின் இரண்டாவது ஊழல் பட்டியல் தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று மாலை ஆளுநரை சந்திப்பது வெறும் ஒரு அரசியல் ஸ்டண்ட். நேருக்கு நேர் வந்து விவாதம் செய்தால் முகத்திரை கிழிந்துவிடும் என்பதாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் ஆளுநரை சந்தித்து பொய் புகார் செய்ய முயல்கின்றனர். அதிமுகவினருக்கு மடியில் கனமில்லாததால் அவர்களுக்கு பயமில்லை.

புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டிய ஊழலிலும், 2ஜி ஊழலிலும் பயந்துகொண்டு தற்காலிகமாக வழக்கை நிறுத்தி வைத்துள்ளனர். வெறும் ஊழலுக்காக மட்டுமே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான். ஊழலால் தங்கள் குடும்பத்தினரை மட்டுமே பணக்காரர்களாக ஆக்கிக்கொண்டு இன்று ஆசியாவிலேயே மிகப்பெரும் பணக்கார குடும்பமாக அவர்கள் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவின் ஊழல் ஆட்சியை மக்கள் புரிந்து வைத்துள்ளதால் அவர்களின் எந்த நாடகமும் மக்கள் மத்தியில் செல்லாது.

வரும் 28 ஆம் தேதி விழுப்புரத்தில் நடக்கவுள்ள மாநாடு குறித்தும் அதில் யார், யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது பற்றியும் கட்சி சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும். சசிகலா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. சசிகலாவிற்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிமுகவிற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்ற தீர்ப்பில் இனி மாற்றம் இருக்காது. பொதுக்குழு கூட்டி கட்சியில் இருந்து முழுமையாக சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். சசிகலாவை நீக்க வேண்டும் என்பது கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பமாகும். அவர்களின் விருப்பத்தை கட்சி நிறைவேற்றி இருக்கிறது.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக மற்றும் அதன் பி-டீமான அமமுக இணைந்து செயல்பட்டுள்ளது. இருந்தாலும் அதிமுக என்ற பலம் பொருந்திய கட்சியை ஆட்டிப்பார்க்க முடியாது. திமுக மற்றும் அமமுக தனியாகவோ அல்லது சேர்ந்தோ என்ன சித்து விளையாட்டுகளை செய்தாலும் தர்மம் அதிமுகவின் தலை காக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details