இது தொடர்பாக அவர் அறிக்கையில், ”அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பம் தருவார்கள். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவார்கள். தீர்வு ஏற்படாவிட்டால், துறை அமைச்சர் முன்னிலையிலோ அல்லது முதலமைச்சர் முன்னிலையிலோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுண்டு.
சில நேரங்களில் தீர்வு காணாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவதும் உண்டு. இதுதான் நடைமுறை ஆனால், எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடந்திருக்கிறது. ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியாகத்தான் இருக்கும்.
திமுக ஆட்சியில் இருந்த 2010ஆம் ஆண்டு, பொறியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கோரிக்கை வைத்தார்கள். பொறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஓர் முடிவு காண, ஒருநபர் ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார். அந்த ஆணையத்தின் முடிவுப்படி, அடிப்படை ஊதியம் ரூ.15,600 மற்றும் கூடுதலாக தர, ஊதியம் ரூ.5,400 உதவி பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டது.