இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அலுவலருக்குப் பதவி உயர்வு அளித்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013க்கும் முற்றிலும் எதிரானதாகும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டிஜி.பியாக திரிபாதி ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் தலைமையகத்தில் இன்னொரு டிஜிபி அந்தஸ்துள்ள அலுவலரை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.
அரசியல் ரீதியான அழுத்தங்கள் சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், “சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்” என்று வரையறுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் - குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்திருத்தச் சட்டத்திற்கே எதிராக முதலமைச்சர் அதுவும் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்.
தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு, குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐபிஎஸ் அலுவலர்களை நியமித்திருப்பது வேதனைக்குரியது.