தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சனாதனம் என மக்களை திசை திருப்புவதா.? திமுகவை நோக்கி ஓபிஎஸ் கேள்வி.! - ஆட்சி

மக்களுக்கு ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தியை திசை திருப்ப, திமுகவினர் சனாதனம் பற்றி பேசி வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 4:29 PM IST

சென்னை:மக்களுக்கு ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தியை திசை திருப்ப, சனாதனம் என்ற போர்வையில் மக்களை திமுக ஏமாற்ற முயற்ச்சிக்கிறது எனவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விடியலை நோக்கி’ என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களை ‘விரக்தியை நோக்கி’ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என பலமுனைத் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதனால் மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், தி.மு.க.வின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பினையும், அதிருப்தியினையும் திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக விமர்சித்த ஓ பன்னீர்செல்வம் இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், இந்திய அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கங்கள் நடைபெற்று, மக்கள் அதற்குரிய பலனை அனுபவித்து வரும் சூழலில், சனாதனம் குறித்து பேசுவது தேவையற்றது எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சமதர்மம் குறித்து பேசும் தி.மு.க., முதலில் தி.மு.க.வில் சமதர்மம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்தான், தி.மு.க. தன் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப முயற்சிக்கிறது எனவும் முயன்றாலும் அது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் விளைவாக வருகின்ற தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வுவது நிச்சயம் எனக்கூறிய ஓ.பன்னீர் செல்வம், அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அகற்றும் ஆயுதமாகும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சனாதனத்தைப் பற்றி நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாதபோது அமைச்சர் பதவியை எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். என்னை பேசக் கூடாது என்றால் திரும்பத் திரும்பப் பேசுவேன். சனாதனத்தை ஒழிக்கும் வரை தி.மு.க போராடும்.” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"சனாதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசுகிறார்" - டிடிவி தினகரன் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details