சென்னை:திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், கருணாநிதி நூற்றாண்டு விழா பணிகள், புதிய நிர்வாகிகள் நியமனம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 7ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் மிகப்பெரிய நினைவுப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆண்டு முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெறுவது குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’இதெல்லாம் தலைவருக்கு மட்டும் தான் நடக்கும்’... தனியார் நிறுவன அறிவிப்பால் மார்தட்டி கொள்ளும் ரஜினி ரசிகர்கள்!!