திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற லட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி உயிரிழந்த ஜெ. அன்பழகன் மறைவிற்கு அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர்.
இதேபோல், தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி, பாவலர் க. மீனாட்சிசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ. அம்பலவாணன், மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் மகள் மணமல்லி ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா தோற்று அதிகரித்து வருகிறதால் அடுத்தக்கட்ட திமுக செயல்பாடுகள் குறித்தும், திமுக நிர்வாகிகள் களப்பணிகளில் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.