சென்னை:மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போதும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் போதும் ஏராளமான கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் குறித்து புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டத்தின் போது பேசிய 174வது வார்டு திமுக கவுன்சிலர் ராதிகா, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆய்வுக்கு வந்தபோது ஆணையர் தரப்பில் இருந்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் அதே பகுதியில் சமூக ஆர்வலர் எனப் பெயரில் உள்ள சிலருக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகிறது. மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காததால் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு வருத்தம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.