சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் வசிப்பவர் மோகனா (49). இவர் கடந்த 27 வருடமாக வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் சாலையோரம் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக 51ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனா என்பவரது கணவர் ஜெகதீசன், அப்பகுதியில் சாலையோரம் கடை நடத்திவரும் வியாபாரிகளிடம் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் அவர் சாலையோரம் துணிக்கடை நடத்தி வரும் மோகனாவை மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மோகனா மாமூல் தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடித்து, உடம்பில் கை வைத்துத் தள்ளி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கம் போல் மோகனா கடையிலிருந்தபோது அங்கு சென்ற நபர் ஒருவர் அண்ணன் ஜெகதீசன் மாமூல் வாங்கி வருமாறு கூறியதாக பணம் கேட்டுமிரட்டியுள்ளார். அதற்கு மோகனா பணம் கொடுக்க மறுக்கவே உடனே அந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனாவிடம் கொடுக்க ஜெகதீசன் அவரை தகாத வார்த்தையில் திட்டி, கடையை காலி செய்து விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து ஜெகதீசன் கூறியதன் பேரில் மாநகராட்சிக் குப்பை அல்லும் வாகனத்தில் வந்த சிலர், மோகனாவின் கடையை காலி செய்ய முயன்றனர். உடனே அங்கிருந்து வியாபாரிகள் ஒன்று கூடி கவுன்சிலர் கணவர் ஜெகதீசனுக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.