சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், “மக்கள் நலனைக் காக்கும் அரசாக, ஓர் அரசு எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற அரசாக திகழ்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்பட பல்வேறு சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிட, அரசியல் எதிரிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித்திட்டம் தீட்டி, பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்பிட நினைக்கிறார்கள்.
நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவர்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டருக்கும் உண்டு. எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள்.
உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப்பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள். அவற்றைப் புள்ளி விவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள்.
அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்க வேண்டும். ஊடகங்களையும், சமுக வலைதளங்களையும் நமக்கெதிராகத் திருப்பிட முனைவார்கள். ஒவ்வொரு தொண்டரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை - திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கட்சிக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்.
தொண்டர்களின் உயர்ந்த உணர்வாலும், உடலில் ஓடும் உதிரத்தாலும் உருவான லட்சிய இயக்கம் இது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையை மிக வலுவாகக் கட்டமைத்தவர் அண்ணா. அதனை மேலும் வலிவும் பொலிவுமாக்கியவர் கருணாநிதி.
கட்சியின் தலைமை முதல் கிளை வரையிலான வலுவான அமைப்புக்குத் துணை நின்று பணியாற்றுவதற்காக சார்பு அமைப்புகளான பல்வேறு அணிகளை உருவாக்கித் தந்தார் தலைவர் கருணாநிதி. உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியையும் கவனத்திலும் கருத்திலும் கொண்டே இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.
இயன்ற அளவு கட்சியின் மூத்தவர்கள், இளையவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேறுபாடு சிறிதுமின்றிப் பங்கேற்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை என ஒரு சிலர் நினைக்கலாம்.