திமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில் திமுகவின் பெரியண்ணன் மனப்பாங்கு தோழமைக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை திமுகவுடன் இரண்டு இஸ்லாமிய கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு இறுதிசெய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 18 முதல் 25 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 முதல் 5 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. மேலும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேசியக் கட்சியான காங்கிரசுக்கு 2011 தேர்தலில், திமுக கூட்டணியில் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் ஐந்து தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெற்றிகாண முடிந்தது. 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
இதனால் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைப்படி 20 வரை தொகுதிகள் கொடுத்தால்போதும் எனக் கூறப்படுகிறது. முதலில் 15 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த திமுக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 23-25 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் 35 தொகுதிகள் வரை அதிகபட்சமாக எதிர்பார்க்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த மக்களவைத் தேர்தலில், தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டன. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் 12 தொகுதிகள் வரை ஒதுக்க கோரிக்கை வைப்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் உரிய மரியாதையுடன் கணிசமான தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், அதிகபட்சம் 25 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என திமுக விடாப்பிடியாக இருக்கிறது.
மதிமுகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ள திமுக தனது சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 3) இரவு நடந்துள்ளது.