சென்னை மூலக்கொத்தளம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக சார்பில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பரிசாக 1200 கிறிஸ்தவ மக்களுக்கு அரிசி, போர்வை, கேக் போன்றவற்றை தயாநிதி மாறன் வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், 'கருணாநிதி இருந்திருந்தால் என்ன பேச சொல்லி இருப்பாரோ, அதையேதான் ஸ்டாலின் எங்களை நாடாளுமன்றத்தில் பேச சொன்னார். மோடி வெளிநாடுகளில் ' யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்று கூறுகிறார். தமிழ்ப் பெருமையைப் போற்றுகிறார். ஆனால், இந்தியாவில் தமிழர்களை முதுகில் குத்துகிறார்.
நாட்டில் பொருளாதாரம், வேலையின்மை உள்ள நிலையில் மதத்தின் பெயரால் மோடி நாட்டையே கூறு போடுகிறார். பாஜக அரசு மக்களைப் பிரித்து, மத உணர்வைத் தூண்டி நாட்டையே இரண்டாகச் சிதைக்கிறது. இதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது. இதற்கு எதிராகப் போராடும்.