சென்னை:திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம், பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராகவும் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், திருச்சபைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தனது ஆதரவாளர்களை நியமனம் செய்யக்கோரி, திருச்சபைக்கு ஞானதிரவியம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஞானதிரவியத்தை நீக்கி தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து, இந்த பதவிக்கு அருள் மாணிக்கம் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, திருச்சபையில் உள்ள பேராயர் நோபலிடம் ஞானதிரவியத்தை நீக்கியது குறித்து எம்.பி.யின் ஆதரவாளர்கள் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த வாக்குவாதத்தின்போது, ஒரு கட்டத்தில் எம்.பி. ஞானதிரவியம் தரப்பினர் நெல்லை பேராயர் நோபலை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் காயம் அடைந்த நோபல், நடைபெற்ற மோதல் குறித்து திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ஞானதிரவியம் நீக்கம் குறித்து விளக்கம் கொடுக்கும் கூட்டத்தில் திமுகவினர் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.