தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவுக்குத் தகுதி இல்லை' - தபால் வாக்குக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி - மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'திமுகவுக்கு தகுதி இல்லை'
'திமுகவுக்கு தகுதி இல்லை'

By

Published : Mar 17, 2021, 4:09 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு நேற்று( மார்ச் 16) விசாரித்தது.

அப்போது இந்த வழக்கில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிப்பது, தேர்தலில் ரகசியத்தைப் பாதிக்கும்" என வாதிட்டார்.

தொடர்ந்து, "அரசியல் சாசனத்தின்படி, தேர்தல் வாக்களிப்பில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. மாற்றுத் திறனாளிகள் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது தான் அடையாளம் காண முடியும். முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை" என அவர் வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், "தவறான யூகத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது சம்பந்தப்பட்ட வாக்காளரின் விருப்ப தேர்வுதான்" என்று கூறினார்.

இதனையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், "மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதுசம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தாலே போதுமானது. மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க அவசியமில்லை" என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மார்ச் 17) மீண்டும் விசாரித்த நீதிபதிகள் , "தபால் வாக்கு செலுத்த அனுமதி அளித்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து வழக்குத் தொடர திமுகவுக்குத் தகுதி இல்லை" எனக்கூறி ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details