கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வெளியிட்டிருந்த காணொலி விவகாரம் தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. சேனலின் தொகுப்பாளர், உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக, இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இச்சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ”திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் எழும் ஆதரவைத் தொடர்ந்து, அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பிவருகின்றனர்.
அதில் ஒன்றாக திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு உருவாக்கி, அவர் கறுப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலுக்கு ஆதரவாக இருப்பது போல் செய்திகள் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற போலியான, பித்தலாட்டதனமான செய்திகளை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் வழக்கு தொடர உள்ளோம்.
ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு முருகனைப் பழித்துப் பேசியது வன்மையாகக் கண்டிக்கதக்க ஒன்று. சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு குறிப்பிட்டு இன்னும் சில காலங்கள் இருப்பதாலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரும் ஸ்டாலின் பின்னால் இருப்பதையும் மத்திய அரசு உளவுத் துறை மூலமாக அறிந்துகொண்டு இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க அற்பத்தனமான காரியங்களைக் காவிக் கூட்டங்களை வைத்து இச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது.
குள்ள நரிக் கூட்டம் தமிழ்நாட்டில் மறைமுகமாக நுழையப் பார்க்கிறது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அக்கூட்டத்தை உள்ளே நுழைய விடாமல் பார்த்துக்கொள்ளும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து திமுக போராடுவது நீதிமன்றம் அவமதிப்பு ஆகாது. ஏனென்றால், திமுக நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து போராடப் போவதில்லை, மின் கட்டணம் உயர்வைக் கண்டித்துத்தான் போராடப் போகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:மத உணர்வைத் தூண்டும் அரசியலுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை - டிடிவி தினகரன்