சென்னை:சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டது. பின் 1982 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இளைஞரணி இரண்டாம் ஆண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். இதனால், இளைஞர் அணி செயலாளர் பதவி வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் பொறுப்பேற்றவுடன் 30 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இணைத்துள்ளார்.
இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. 2023 ஆரம்பத்தில் இருந்தே திமுகவின் இளைஞர் அணியை வலுப்படுத்தும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார். குறிப்பாக, திமுகவில் அடிமட்டம் வரை இளைஞர் அணிக்கு என்று நிர்வாகிகளை நியமிக்கும் பணி தொடங்கினார்.
இந்த நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பதவிகள் கிடைக்கும் என கூறப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி சார்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மாநில மாநாட்டிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2007ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வரலாற்றில் முத்திரை பதித்து திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு தொடர்ந்து, வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த மாநாடு நடைபெறும் என்பதால் அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: TNUSRB SI EXAM: உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தொடங்கியது.. ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்!