சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சென்னை குரோம்பேட்டையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்துயிட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்தும் தமிழக முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நீட் தேர்வை ரத்து செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆகஸ்ட் 20-ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் திமுக இளைஞரணி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.’
இந்த நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மதுரை மாநாடு குறித்தான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி சார்பில் முன்னெடுக்கும் போராட்டம் குறித்து, நீட் விவகாரத்தில் திமுக பொது மக்கள் காதில் பூ சுத்தும் வேலை, அல்வா கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறது என விமர்சனம் செய்தார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடத்த எந்த தகுதியும் முகாந்திரமும் திமுகவிற்கு இல்லை என்றும் நீட் தேர்வுக்கு எதிராக அப்போது போராடாமல் இன்று போராடுவது என்ன என்பதை பார்க்கும்போது திமுகவினர் சந்தர்ப்பவாதிகள் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நிச்சயம் தெரியும் என்றும் தெரிவித்தார்.