உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
திமுக அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி, திமுக தனது கூட்டணியை மாற்றியமைக்கப் போகின்றது என்ற வதந்தியும் கடந்த சில தினங்களாகப் பேசப்பட்டு வந்தது. அதன்படி வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போன்ற தகவல்களும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. அதேபோல் ரஜினியின் அரசியல் வருகையைப் பொறுத்து கூட்டணிகள் மாறும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் 'திமுக கூட்டணி உடையும் என நான் முன்பே கூறியிருந்தேன்' என்று பேட்டியளித்தார். இதற்கு மத்தியில் திமுக பொருளாளர் துரைமுருகன், 'காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்ல வேண்டும் என்றால் செல்லட்டும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே கிடையாது' எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் 'தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது' என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
அதேபோல் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாகூர் 'திமுக கட்சிக்குள் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகக் கூடாது என சதி வேலைகள் நடக்கின்றன' என்று திடீர் புயலைக் கிளப்பினார். இவ்வாறு இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து கூட்டணி விரிசலை பெரிதாக்கிக்கொண்டே வந்தனர். இதுவே இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியது.