சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (IPDS) என்ற அமைப்பு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தினர்.
கடந்த 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த 1,761 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் மக்கள் பிரச்னை, ஆளுங்கட்சி செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் கருத்து கேட்கப்பட்டது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக இந்திய ஜனநாயக யுக்திகள் நிறுவனர் சி.திருநாவுக்கரசு சென்னையில் இன்று(பிப்.14) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 20 மாத ஆட்சி எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் ஆதரவும், 60 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து கேட்கும்போது 39 சதவீதம் பேர் ஆதரவும், 51 சதவீதம் பேர் எதிர்ப்பும், 10 சதவீதம் பேர் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். போதைப்பழக்கத்தை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, 80 சதவீதம் பேர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், 11 சதவீதம் பேர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
தற்போதுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சியா? அல்லது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறப்பான ஆட்சியா? என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பானது என்றும், 53 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பானது என்றும் தெரிவித்தனர்.