சென்னை:கிராமப்புற மாணவர்கள், அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கபட்டுவாத கூறி, தமிழ்நாட்டிற்கு 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் விவகாரத்தை முன்னிறுத்தி நீட் தேர்வுக்கு எதிராக 'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற கையெழுத்து இயக்கத்தை திமுகவின் இளைஞரணியின் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 'திமுகவின் அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்' இன்று மாலை நடைபெறவுள்ளது.இது தொடர்பாக திமுக சார்பாக அறிக்கை வெளியிடபட்டிருந்தது. அதில் "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் மனநிலையை மத்தியரசுக்கு உணர்த்தும் வகையில் திமுக இளைஞர் அணி செயலாளர் முன்னெடுப்பில் 'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற மிகப்பெரிய கையெழுத்து இயக்கத்தை 21.10.23 காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.
நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றுகின்ற வகையில், இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக தமிழ்நாட்டில் உள்ள வளர்ந்த பகுதிகள் மட்டுமல்லாது; அனைத்து கிராமப்புற மக்களுக்கும் கொண்டு சேர்கின்ற வகையில் திமுக அமைப்பு செயலாளர் தலைமையில் இன்று (அக்.23) மாலை 6.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக அனைத்து அணி செயலாளர்களுடன் ஆலசோனையில் ஈடுபடவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ள இந்த கையெழுத்து இயக்கம் வரக்கூடிய அடுத்த 50 நாட்களில் மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்தினை பெற திமுக முடிவு செய்துள்ளது.
இதனால், திமுகவின் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் மற்றும் இதர நிலையில் உள்ள அமைப்பாளர்கள் மூலம் கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தி 50 நாட்களுக்குள்ளாகவே இப்பணியை முடிக்க வேண்டும் என உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். '50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து - நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி' மத்தியரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறபடவுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதிலும் கொண்டு சேர்க்கின்ற வகையில், அனைத்து அணி செயலாளர்களும் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். இதற்காக தான் இன்று மாலை அனைத்து அணி செயலாளர்களுடன் ஆர்.எஸ்.பாரதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. நீட் விவகாரத்தில் மத்தியரசு விரைவில் முடிவெடுக்கவில்லை என்றால், ஜல்லிகட்டு போராட்டம் போல் (Jallikattu Protest) வீரமிக்க ஒரு போரட்டத்தை கையில் எடுக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் உதயநிதி ஏற்கனகே கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:"நீட் தேர்வெழுதும் மாணவர்களின் ஆடைகளை கிழிப்பதுதான் மத்திய அரசின் மாடல்?" - அமைச்சர் அன்பில் மகேஷ்!