சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று (மே 30) கூடியது. இந்தக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது.
குறிப்பாக, நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார், “ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாமன்றக் கூட்டத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெருங்குடி ஏரிதான் கந்தன்சாவடி, கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.
என் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஒருவராக அதை பராமரித்தார். அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர் அதை கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, என் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தாயார் செய்வதற்கு சரியாக இயந்திரம் இல்லை என்று, அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். எனவே, அதை சரி செய்து தர வேண்டும்” என கூறினார்.
இதனையடுத்து பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் ரவி சந்திரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேப்டன் தோனி எந்த பந்திற்கு, எந்த பகுதியில் ஃபீல்டரை நிற்க வைக்க வேண்டும் என்று கணித்து நிற்க வைத்ததால்தான் அந்த அணி வெற்றி பெற்றது. அதேபோல்தான் முதலமைச்சர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அமைச்சர் பணி கொடுத்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
மேலும், கல்லுக்குட்டை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், அங்கு வசிக்கும் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார் தந்தையோ (கந்தன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்) அல்லது மாமன்ற உறுப்பினராக இருந்த அவர் சித்தியோ ஏதும் செய்யவில்லை.