தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரத் தந்தைகளின் போர்!

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் தாங்கள் மக்களுக்காக என்ன செய்தோம், வெற்றிபெற்றால் இனி என்ன செய்வோம் என மக்களிடம் எடுத்துரைத்துவருகின்றனர். இவர்களின் வெற்றி எப்படி உள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத் கள ஆய்வுமேற்கொண்டது. அதன் தொகுப்பு இதோ...

மாநகரத் தந்தைகளின் போர்!
dmk, admk fielded Former mayors in Saidapet constituency

By

Published : Mar 24, 2021, 6:22 PM IST

Updated : Mar 25, 2021, 9:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவரும் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்கின்றன. தற்போது இந்தத் தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா என்ற நிலையில் உள்ளது.

சைதாப்பேட்டை இதுவரை...

சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 73 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 414 பெண் வாக்காளர்களும், 75 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறையும், பின்னர் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் மாறி மாறி வெற்றிபெற்றன. அதில், 9 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும் வெற்றிபெற்றன.

சைதையும், மாசுவும்!

ஆனால் தற்போது, கட்சி சார்பில் முன்நிறுத்தப்படும் வேட்பாளர்களே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது திமுகவும், அதிமுகவும். இந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளராக முன்நிறுத்திய சைதை துரைசாமியும், மா. சுப்பிரமணியனும் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர்கள். இவர்கள் இருவரும் சென்னை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள்.

இருப்பினும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றால் மக்களுக்கும், தொகுதிக்கும் என்ன நன்மைகளைச் செய்வோம், இதுவரை தொகுதி மேம்பாட்டிற்காக என்னென்ன செய்தோம் என்பதை வலியுறுத்தி இருவரும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு மத்தியில் இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டது.

சைதை துரைசாமி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சைதை சா. துரைசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். பின்னர், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து, தற்போது அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலினுக்கே டஃப்

இவர், 1984ஆம் ஆண்டு சைதாப்பேட்டைத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, அப்போதைய துணை முதலமைச்சரும், திமுகவின் வேட்பாளருமான மு.க. ஸ்டாலினுக்கு டஃப் கொடுத்தார். இதில் ஸ்டாலினிடம் 2,734 வாக்குகள் வித்யாசத்திலேயே வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

மேயர் சைதை

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்டு பணியாற்றினார். அதுமட்டுமின்றி, அதிமுகவின் முதல் சென்னை மாநகராட்சி மேயர் என்ற பெருமையும் பெற்றார்.

தற்போது பரபரப்பான தேர்தல் வாக்குச் சேகரிப்புக்கு மத்தியில் நம்மிடம் பேசிய சைதை துரைசாமி, "நான் நேரடியாக மக்களால் மேயராகத் தேர்வுச் செய்யப்பட்டவன், தொகுதி வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். சைதாப்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததே அதிமுக ஆட்சியில்தான்.

எம்ஜிஆரின் அறிவுரை

எம்ஜிஆரின் அறிவுரைப்படி, தற்போதுவரை வாழ்ந்துவருகிறேன். தொகுதியின் அடிப்படை வளர்ச்சிக்காக அரசின் கவனத்தை ஈர்த்து பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியுள்ளேன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துள்ளேன். சுகாதாரமும், உணவும் முக்கியம் என்னும் சிந்தனையில் செயல்பட்டுவருகிறேன்.

'செயலில் காட்டுவேன்'

வெற்றிபெற்ற பின் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக்கூறி வாய்ச்சொல் வீரனாக இருக்க விரும்பவில்லை. எனக்கு வாய்ப்பளித்தால் அனைத்தையும் செயலில் காட்டுவேன். என்னுடைய பிரதிநிதிகள் மூலம், மக்கள் குறைகளை அறிந்து அவற்றை நிவர்த்திசெய்ய தீவிரமாகச் செயல்படுவேன்" என்றார்.

மாநகரத் தந்தைகளின் போர்!

மா. சுப்பிரமணியன்

அதேபோல் திமுக சார்பில் இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள மா. சுப்பிரமணியன் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சென்னையின் மாநகர மேயராக இருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகப் பல்வேறு பாலங்களைக் கட்டியதுடன், பல திட்டங்களையும் நிறைவேற்றினார்.

2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொகுதி வளர்ச்சிக்காகப் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

பட்டாவுக்கு முக்கியத்துவம்

இவர் நம்மிடம் பேசுகையில், "நான் மேயராகவும், மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகப் பல்வேறு பாலங்களைக் கட்டியுள்ளோம்.

சட்டப்பேரவையில் சென்னையின் வளர்ச்சிக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளேன. பட்டா பெறுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் இத்தொகுதி மக்களுக்கு பட்டா வழங்க முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன்" என்ற வாக்குறுதிகளை அளித்தததுடன், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் மக்களுக்கு எந்த நலத் திட்டத்தினையும் வழங்காமல் இப்போது, ஆட்சிக்கு வந்தால் பல நலத்திட்டங்களைச் செய்வேன் எனக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்புகிறார்.

மே 2இல் விடை

இப்படி இவர்கள் மாறி மாறி தாங்கள் செய்ததையும், இனி செய்யப்போவதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர எடுத்துவரும் முயற்சிகளுக்கான விடை மே 2இல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Mar 25, 2021, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details